தற்போதைய காலத்தில் கைப்பேசி இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மொபைல்கள் அனைவரது வாழ்க்கையிலும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. குறிப்பாக இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு, மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக கைப்பேசிகள் மாறிவிட்டன.
இன்றைய ஜென்சி தலைமுறையினர் பலர் டிவி பார்க்காமல் இருந்து விடுவார்கள்; ஆனால் மொபைல் இன்றி இருக்க முடியாது. யூடியூப் வீடியோக்கள், லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அனைத்தும் இணையத்தை சார்ந்தே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், இணைய வசதி இல்லாமலேயே மொபைலில் லைவ் டிவி நிகழ்ச்சிகளை பார்வையிடும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டிரைக்ட் டு மொபைல் (Direct to Mobile)’ என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொலைத்தொடர்புத் துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், செயற்கைக்கோள் வழியாக நேரடியாக மொபைலுக்கு ஒளிபரப்பு வழங்கப்படவுள்ளதால், இணைய இணைப்பு இல்லாமலேயே லைவ் டிவி நிகழ்ச்சிகளை காண முடியும். தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த தொழில்நுட்பத்தை, விரைவில் இந்தியாவில் 19 நகரங்களில் பெரும் அளவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக பிரத்யேக சிப் பொருத்தப்பட்ட செல்போன்களை உருவாக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ‘*சான்கியா லேப்ஸ்*’ நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறது.
பேரிடர் காலங்களிலும், செல்போன் சிக்னல் இல்லாத தொலைதூர பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பம் பெரும் பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தகவல் தொடர்பு துறையில் புதிய மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், இணைய சேவைகளின் மூலம் பெரும் லாபம் ஈட்டிவரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.