முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய சட்டவாக்கம் குறித்த மிக முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்றும் சபையில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பிரேரணையை சபை உறுப்பினர்களான சிவபாதம் குகனேசன் மற்றும் குமாரவேலு அகிலன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
சபைக்கு வருகை தந்திருந்த 18 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.
3 உறுப்பினர்கள் இன்றைய அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.
அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்து வரும் சூழலில், வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றம் ஒன்றில் அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.