சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவு ஏற்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளான உடபலாத்த, மாவதுர கிராமத்திற்கு இன்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மாவதுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், மக்களின் தைரியத்தையும் ஒற்றுமையையும் பாராட்டினார்.
“இங்குள்ள சிறுவர்களே நாட்டின் எதிர்காலம். அவர்களை வலுப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டார்.
இவருடன் தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அனர்த்தத்தின் போது அரசாங்கம் மேற்கொண்ட விரைவான மீட்பு நடவடிக்கைகளை ஜோர்ஜியேவா இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.