இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளிலும், குறிப்பாக வலுசக்தி பாதுகாப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, இந்தியா இலங்கைக்கு வழங்கிய சிறப்பான உதவிகளை நன்றியுடன் பாராட்டியதுடன், இந்திய அரசின் ஆதரவுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும், டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம் பெற்றது.

மேலும், மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட மத மற்றும் கலாசார ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், குறிப்பாக மனித வள அபிவிருத்தி மற்றும் அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டங்களில் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும், இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு நீண்டகால நிரந்தர தீர்வை காண வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *