தனது இசைக்குத் தானே உரிமையாளர் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய வழக்கில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இளையராஜா இசையமைத்த 134 படங்களின்இசை உரிமை தங்களிடம் இருப்பதாக சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி, அமேசான் மியூசிக், ஜியோ சாவன் போன்ற தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என அந்த நிறுவனம் வாதிட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடலா, இந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கவோ இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
சினிமா தயாரிப்பாளர்களுடன் 1976 முதல் 2001 வரை போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், அந்தப் பாடல்களின் உரிமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சரிகம நிறுவனம் வாதிட்டது. அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘குட் பேட் அக்லீ’ படங்களுக்கு எதிராக இளையராஜா உரிமை கோரிய நிலையில், தற்போது அவருக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.